வலைதள ‘லைக்’கிற்கு ஆசைப்பட்டு கிணற்றில் குதித்த வாலிபர் உயிரிழப்பு
சரணின் உடலை வெளியே எடுத்த தீயணைப்பு நிலைய குழுவினர்.
சேத்துப்பட்டு அருகே கரிப்பூர் கிராமத்தில் கோயில் விழாவிற்காக கிணற்றில் குதிப்பதை வீடியோ எடுக்க கிணற்றில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. சென்னை யில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சச்சின் , சரண் என 2 மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையிலேயே தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சொந்த ஊரான கரிப்பூர் கிராமத்தில் குலதெய்வ கோவில் திருவிழா நடக்கிறது. விழாவுக்காக ஏழுமலை 2 நாட்களுக்கு முன் வந்துள்ளார்.
2-வது மகன் சரண் தனது நண்பர் ரமேஷ் என்பவரை அழைத்துக் கொண்டு கரிப்பூருக்கு வந்தார். அருகே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக 2 பேரும் சென்றனர்
நான் கிணற்றில் எகிறி குதிப்பதை வீடியோ எடு, இதை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் போடலாம், லைக்குகள் கிடைக்கும் எனக் கூறி உள்ளார்.
இதனால் ரமேஷ், சரண் குதிப்பதை வீடியோ பதிவு செய்தார். கிணற்றில் குதித்த சரணிற்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
பின்னர் இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் எட்டு பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததால் நான்கு மோட்டார்களை வைத்து கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆறு மணி நேர முயற்சிக்குப் பின்னர் கிணற்றில் இருந்து நீர் வெளியேற்றப்பட்ட பின்னர் சரணின் உடலை வெளியே எடுத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக செல்ஃபி மற்றும் சமூக வலைதளங்களில் போடுவதற்காக வீடியோ எடுக்கும் மனநிலை இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், உயிருக்கு ஆபத்தான நீச்சல், வாகனம் ஓட்டும் பணிகளின்போது செல்ஃபி மற்றும் வீடியோ எடுப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லைக்கிற்காக கிணற்றில் குதித்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu