காணாமல் போனவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

காணாமல் போனவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
X

கிணற்றுக்குள் முதியவரை தேடும் தீயணைப்பு துறையினர்

காணாமல் போனவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து, மீட்புப்பணிக்கு வருவாய்த்துறையினர் வராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த வேளானந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட நெய்குப்பம் கிராமத்தில் வசித்தவர் பழனி (வயது 74), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாயக்கிணற்றில் சமீபத்தில் பெய்த மழையால் 100 அடி ஆழத்துக்கு நீர் நிரம்பி உள்ளது.

நேற்று பழனி விவசாயக் கிணற்றில் குளிக்கச் செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பாத்தால், அவர், கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்த குடும்பத்தினர் உடனே வேட்டவலம் தீயணைப்பு நிலையத்துக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலை கேள்விப்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயக் கிணற்றில் இறங்கி, பழனியை தேடினர். மேலும் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றும் பணி நடந்தது.

ஆனால், கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வராததால் ஆத்திரம் அடைந்த பழனியின் குடும்பத்தினரும், கிராம மக்களும் திருவண்ணாமலை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர், வேட்டவலம் காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிணற்றில் கூடுதலாக மோட்டார்களை பொருத்தி நீரை வெளியேற்றி பழனியை தேடும் பணியை தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். விவசாயக் கிணற்றில் இருந்த நீரை முற்றிலும் வெளியேற்றி பழனியை தேடியபோது, கிணற்றில் அவரை காணவில்லை.

இதையடுத்து பழனியின் மனைவி நவநீதம் தனது கணவரை காணவில்லை, எனக் இன்று காலை கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பழனியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!