குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
X

குடிநீர் சரிவர வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

கத்தாழம்பட்டு கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழம்பட்டு கிராமத்தில் உள்ள மேட்டு காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் அப்பாசாமியிடம் பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், குடிநீர் பிரச்சினை மற்றும் கத்தாழம்பட்டு கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து சரிவர இல்லாத காரணத்தாலும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அவலூர்பேட்டை- கீழ்பென்னாத்தூர் வரும் மையப்பகுதியில் உள்ள மேக்களூரில் கத்தாழம்பட்டு கூட்ரோட்டில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கபார் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனைத்து இடங்களிலும் நீர்நிலைகள் நிரம்பி இருந்த போதிலும், தண்ணீர் வினியோகிக்கவில்லை என்றும், தண்ணீர் வழங்கினால் தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து தண்ணீர் வினியோகத்திற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக போலீசாரும், அரசு அலுவலரும் உறுதி அளித்தனர்.

அதன் பேரில், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business