ரூ.15 லட்சம் திருட்டு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

ரூ.15 லட்சம் திருட்டு உள்ளிட்ட  திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
X
வந்தவாசியில் பர்னிச்சர் கடையில்,15 லட்சம் ரூபாய் திருட்டு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், அச்சரப்பாக்கம் சாலையில் இஷாத் என்பவர், பர்னிச்சர், எலக்ட்ரானிக் பொருட்கள் கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரண்டு கல்லாப்பெட்டிகள் உடைக்கப்பட்டுஅதில் வைக்கப்பட்டு இருந்த 15 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுபற்றி உடனடியாக வந்தவாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வந்தவாசி தெற்கு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையின் இரண்டாவது தளத்தின் தகரக்கூரையை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், கழிவறை வழியாக கடையினுள் புகுந்து, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இது தொடர்பாக கடை ஊழியர்கள், தற்போது கடை கட்டிட பணியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களின் கைரேகையை பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அண்ணன்-தம்பி கைது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் உள்ளது. இதன் ஜமாத் தலைவராக அத்தாவுல்லா என்பவர் இருந்து வருகிறார்.

ஜமாத்துக்கு சொந்தமான இடத்தின் அருகில் ஜவகர்லால் நேரு என்கிற ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இவருக்கு ராஜா , சுந்தர் என 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தை அண்ணன்-தம்பியான ராஜா, சுந்தர் ஆக்கிரமிப்பு செய்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வருவாய் துறையினர் மூலமாக அளந்து கல் நடப்பட்ட நிலையில், அத்துமீறி கல்லை அகற்றியதை கேட்ட போது அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து அத்தாவுல்லாவை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் அத்தாவுல்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, சுந்தர் ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Next Story