பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ஊராட்சி செயலாளருக்கு பாராட்டு

பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ஊராட்சி செயலாளருக்கு பாராட்டு
X

தூய்மைப் பணியை தாமே மேற்கொண்ட ஊராட்சி செயலாளரை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அரசு செயலர், மாவட்ட ஆட்சியர்

பருவமழை காலத்தில் முன் எச்சரிக்கை பணியை மேற்கொண்ட ஊராட்சி செயலாளரை ஆட்சியர் பாராட்டினார்.

பருவ மழை காலத்தில் டெங்கு மற்றும் நோய்கள் தடுப்பில் கல்பூண்டியில் மேச்சத்தக்க வகையில் பணிபுரிந்த ஊராட்சி செயலாளரின் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மாநிலத்திலேயே அதிக கிராம ஊராட்சிகளை கொண்ட மாவட்டம் திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகள் உள்ளன. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள குடியிருப்புகளுக்கும், மேநீர்தேக்க தொட்டிகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

பருவ மழை காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் பரவுதலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 18 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 860 கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 5196 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் கிருமி நாசினி பவுடர் பயன்படுத்தி தூய்மைப்படுத்தும் பணியினை சுழற்சி முறையில் துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிகள் அனைத்தும் முறையாக சுழற்சி முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறதா, என்பதை கண்காணித்திடும் பொருட்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கண்காணிப்பு அலுவலரை மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்து உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் தூய்மைப்படுத்தும் பணிகள் (Mass Cleaning) நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வி துறை அரசு செயலாளர் மதுமதி மாவட்ட ஆட்சியருடன் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொழுது கல்பூண்டி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது கல்பூண்டி ஊராட்சியில் மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணியை ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர் சின்னராஜ் என்பவர் தாமே மேல்நிலைத் தொட்டியில் ஏறி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஊராட்சி செயலரின் மெச்சத்தக்க பணியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். இது போன்று பொதுமக்களுக்காக பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் நிலை குறித்து சிந்திக்காமல் மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்கிற எண்ணத்தில் முழு அர்ப்பணிப்புடன் பணி மேற்கொள்ள வேண்டும், என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Next Story