செங்கம் வட்டார அளவிலான கலை திருவிழா
குத்து விளக்கு ஏற்றி கலை திருவிழாவை துவக்கி வைத்த கிரி, எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் செங்கம் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற கலை திருவிழா கொண்டாடப்பட்டது.
இக்கலை திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கலை திருவிழாவை துவக்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக களிமண்ணால் ஆன சந்திராயன், நவீன பீரங்கி மற்றும் தத்ரூபமான விநாயகர், சிவன் உள்ளிட்ட சாமி சிலைகள் செய்து பார்வைக்கு வைத்திருந்தனர்.
மேலும் பாரம்பரிய மண்பாண்டங்கள் செய்தும் அதில் தேசிய வர்ணங்கள் பூசியும், போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி, கட்டபொம்மன் நாடகம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இந்த கலைத் திருவிழாவில் இடம் பெற்றிருந்தது.
நிகழ்ச்சியில் கலைஞரைப் பற்றி பேச்சு போட்டியில் பேச்சுப் போட்டியில் பேசிய யாழினி என்ற மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் கிரி பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய மண்பாண்டங்கள் செய்து பார்வைக்கு வைக்கப்பட்டதில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏ கிரி பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செங்கம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், மற்றும் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ,தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் 9 தலைப்புகளில் 33 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 21-ந் தேதி வரை நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வருகிற 26-ந் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இதன் தொடக்க விழா நேற்று கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தேவாசீர்வாதம் தலைமை தாங்கினார். கொளத்தூர், ஜமீன்அகரம் அரசு உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கருணாகரன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழுத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாணவ, மாணவிகள் இசை, நடனம் உள்பட பல்வேறு வகையான கலைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக அவர்கள் நாதஸ்வரம் இசைத்தது பார்வையாளர்களை கவர்ந்தது. முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வம் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu