திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அலகுகள் பாதுகாப்பான அறையில் வைத்து அறைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த தலா 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அலகுகள் பாதுகாப்பான அறையில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டன .
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அலகுகள், வாக்குப்பதிவை சரிபாா்க்கும் விவிபேட் கருவிகள் சில தினங்களுக்கு முன்பு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட 342 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 342 கட்டுப்பாட்டு அலகுகள், 370 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் விவிபேட் கருவிகள் கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.
இந்த இயந்திரங்கள், கருவிகள் லாரிகளில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்டு கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பாதுகாப்பு அறையில் வைத்து, அறை பூட்டி, சீல் வைக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலால் உதவி ஆணையருமான செந்தில்குமாா் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்' வைத்தாா்.
இந்த அறை முன் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலா் கூறினாா்.
நிகழ்ச்சியில், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சரளா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியா் தனபால், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால் , மண்டல துணை வட்டாட்சியா் மாலதி மற்றும் அனைத்து அரசியல் கட்சியினா், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu