திருவண்ணாமலை அருகே தனியார் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்
நிலுவை தொகை வழங்கக்கோரி தனியார் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பம்பாடி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் சர்க்கரை ஆலையை கடந்த 2004-ம் ஆண்டு நஷ்டமடைந்து வருவதாகக்கூறி நிர்வாகத்தினர் மூடினர்.
இதில் திருவண்ணாமலை, மலப்பம்பாடி, சோமாசிபாடி, குண்ணியந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த கரும்புகளை அரவைக்கு ஏற்கனவே கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் தனியார் சர்க்கரை ஆலை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ.6 கோடி வரை கரும்பு அரவை நிலுவைத்தொகை வழங்க வேண்டி உள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தனியார் சர்க்கரை ஆலை இயங்கிய போது தனியார் நிதி நிறுவனத்திடம் சர்க்கரை ஆலை சுமார் ரூ.10 கோடி கடன் பெற்று, அந்த கடனை திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நிதி நிறுவனத்தினர் முதல் கட்டமாக ஆலையில் உள்ள பொருட்களை அகற்ற ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கு ஏலம் எடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் பொருட்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை அறிந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஆர்த்தீஸ்வரி ராஜேந்திரன் தலைமையிலான விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலை முன்பு திரண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கிவிட்டு பொருட்களை எடுத்து செல்லுமாறும், அதுவரையில் பணிகளை தொடர கூடாது என்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu