பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் போலீஸ் குவிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 250-க்கும் மேற்பட்ட பொது பிரிவினரும், 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுப்பிரிவினர் மட்டும் வழிபாடு செய்வார்கள். அதேபோல் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அவர்களுக்கென தனியாக காளியம்மன் கோவிலும் உள்ளது.
இந்நிலையில் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என சிலர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதற்கு பொது பிரிவினர் சமூக வலைத்தளம் மூலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இளைஞர்கள் மாறி, மாறி தங்கள் கருத்துகளை பதிவிட்டதால், இருத்தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிட மக்கள், மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்
இதனை தொடர்ந்து தாங்களும் இந்த கோவிலுக்குள் வருவோம் என்று பட்டியலின மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக வந்து கோயிலுக்குள் நுழைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மேலும் அந்த கிராமத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேலூர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வேலூர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu