கீழ்பென்னாத்தூரில் வேப்ப மரத்தில் பால் வடிந்ததை பார்க்க குவிந்த மக்கள்
பால் வடிந்த வேப்ப மரத்திற்கு பூஜை செய்யும் கிராம மக்கள்
கீழ்பெண்ணாத்தூரில் வேப்ப மரத்தில் திடீரென பால் வடிந்ததால் கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் வேடியப்பன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்தது. இந்த அதிசயம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு பரவியது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பக்தி பரவசத்துடன் வேப்ப மரத்தில் திரவம் போன்று வடியும் பாலை கண்டு வழிபட்டனர்.
அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, 'நான் இங்குதான் இருப்பேன், எனக்கு தினமும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். குலதெய்வ கோயிலான வேடியப்பன் கோயிலில் காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வந்த நிலையில் தற்போது கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இருந்த வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் மரத்தில் கடவுள் இருப்பதாக எண்ணி அப்பகுதி மக்கள் திரண்டு வழிபட்டு வருகின்றனர்.
இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். அத்துடன், வேப்ப மரத்தில் கசிந்த பாலை அம்மனின் தீர்த்தமாக கருதி வழிபாடு செய்து தலையில் தெளித்துக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வு குறித்து வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்
பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை , வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். இந்த நேரத்தில் வேப்பமரத்தின் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால், தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து , மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு இனிப்புப் பால் போன்று வடியும். மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் போன்ற திரவம் வடிவது நின்றுபோகும். இது வேப்பமரத்தின் இயல்பான தன்மை என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu