கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்.
திருவண்ணாமலை இன்று நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த நிலையில் கரிக்கலாம்பாடி ஊர் பொதுமக்கள் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கரிக்கலாம்பாடி ஏரியின் கரையை சிலர் 450 மீட்டர் நீளத்திற்கு வெட்டி மண்ணை திருடி உள்ளனர். வெட்டிய பகுதியின் மேற்புறம் உள்ள பனை மரங்கள் சாயும் நிலையில் உள்ளன. பலத்த மழை பெய்தால் அந்த மரங்கள் சாய்ந்துவிடும். ஏரி நிரம்பினாலோ, புயல் வெள்ள அபாயம் ஏற்பட்டாலோ ஏரி உடையும் நிலைமை ஏற்படும். நீர் நிலையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம நிர்வாக அலுவலர் மோகனிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்:
திருவண்ணாமலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மக்கள் புரட்சி கழக நிறுவன தலைவர் வர்கிஸ், திராவிட கழக மாவட்ட தலைவர் மூர்த்தி, தலித் விடுதலை இயக்க மாநில இளைஞர் அணி செயலாளர் கிச்சா உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். தென்முடியனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை போராடி பெற்றதால், தலித் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மடம் கிராமத்தில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu