இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை

இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட சூர்யா மற்றும் இரண்டு குழந்தைகள் கோப்பு படம்

கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு நர்சு அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு நர்சு அதே கிணற்றில் குதுித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடியை அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசிப்பவர் சின்னராசு (வயது 38). இவர் அருகிலுள்ள கானலாபாடியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சூர்யா (வயது 32), சோமாசிபாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு லக்சன் (4), உதயன் (1) ஆகிய 2 மகன்கள். சின்னராசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், அடிக்கடி குடும்ப பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சின்னராசு திண்டிவனத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தார்.

கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது தாயிடம் அவர்கள் குறித்து கேட்டார். அவருக்கும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இதையடுத்து இருவரும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சூர்யாவின் செல்போனுக்கு போன் செய்த போது அது அங்குள்ள ஏரிக்கரையில் உள்ள கிணற்றின் அருகே இருந்து சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்று தேடி பார்த்தனர்.

கிணற்றில் குதித்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலில் சூர்யாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் குழந்தை உதயன் உடலை மீட்டனர். ஆனால் லக்சன் உடல் கிடைக்கவில்லை. எனவே திருவண்ணாமலையில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி லக்சன் உடலை தேடி வருகின்றனர்.

சூர்யா தனது இரண்டு குழந்தைகளையும் விவசாய கிணற்றில்வீசி தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்தும், சின்னராசுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!