மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் நலத்திட்ட உதவி

மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் நலத்திட்ட உதவி
X

மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் இல்லத்திற்கு சென்று,  மருத்துவ உபகரணங்களை வழங்கி, நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று உதவி செய்தார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பள்ளிகள் இயங்காமல் இருந்த நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டதை சரி செய்திட தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த உன்னத திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார்குப்பம் கிராமத்தில் 27.10.2021 அன்று தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 2 இலட்சம் தன்னார்வலர்கள் 34 இலட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மாபெரும் ஆதரவு இத்திட்டத்தை வெற்றித் திட்டமாக மாற்றியுள்ளது. முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

இன்று இவ்விழாவின்போது, முதலமைச்சர் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்பான காணொளியையும், புகைப்பட விளக்கப் புத்தகத்தையும் வெளியிட்டார்.

மேலும், தொடர் வாசிப்பு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு கோப்பைகளையும் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் இல்லத்திற்கு சென்று, அப்பயனாளிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி, நலம் விசாரித்தார்.

சிவானந்தத்தின் தந்தை ஏழுமலை ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் தமிழரசி விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சிவானந்தம் உட்பட ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இப்பயனாளியின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அண்மையில் மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக ரூ.25,000/- கறவை மாடு வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் இல்லம் தோறும் மேற்கொண்ட கள ஆய்வின் போது, ஒன்றரை வயதில் சிவானந்தத்திற்கு மூளைமுடக்குவாதம் மற்றும் அறிவுசார் குறைபாடு கண்டறியப்பட்டு, தொடர்ந்து இயன்முறை பயிற்சி மற்றும் ஆரம்பகல்வி வழங்கப்பட்டது.

இப்பயனாளிக்கு ரூ.9,000 மதிப்புள்ள தசைப்பயிற்சி உபகரணங்கள் மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள சிறப்புக்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் வாயிலாக இல்லத்திற்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் சிறப்புக்கல்வி வழங்கப்பட்டு, தற்போது இப்பயனாளிக்கு 10-ஆம் வகுப்புக்கான கல்விப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயனாளிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதம்தோறும் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1500 கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு, தற்போது ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கூடுதலாக உதவியாளருக்கான உதவித்தொகையும் ரூ.1000 இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. இத்துடன் ரூ.15000 மதிப்புள்ள மூளை முடக்குவாத சிறப்பு சக்கரநாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது.


இவ்விழாவில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர் க. இளம்பகவத், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!