கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் பால் குளிர்விப்பு மையம் திறப்பு

கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் பால் குளிர்விப்பு மையம் திறப்பு
X

பால் குளிர்விப்பு மையத்தை திறந்து வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்,

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட வழுதலங்குணம் ஊராட்சியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வழுதலங்குணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் மானிய கட்டிடம் ரூ.17.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட வழுதலங்குணம் ஊராட்சியில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் இராமபிரதீபன் ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) டாக்டர் எல்.ரங்கசாமி துணை பதிவாளர் (பால்வளம்) ஆரோக்கிய தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை ஆய்வாளரும் செயலாட்சியருமான வசந்தி அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பால் குளிர்விப்பு மையத்தை திறந்துவைத்து சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கறக்கும் பாத்திரம் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையேற்று கிராமங்களில் ஏழை எளிய மக்களைசந்தித்து கோரிக்கை பெற்று தீர்வு காண்பதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கிராம மக்களை சந்திக்க எனக்கு இந்தநிகழ்ச்சி மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. சாதாரண ஏழை விவசாயி பால் உற்பத்தி செய்து அன்றாடம் வருவாய் ஈட்ட திராவிட மாடல் ஆட்சி உதவியாக இருக்கிறது.

தமிழகத்தில் ஓராண்டில் மட்டும் 12 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் ஆவின் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. தனியார் மற்றும் கூட்டுறவு மூலம் பால் கொள்முதல் செய்வதில் வேறுபாடு உள்ளது. ஆனால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர விலை வழங்கப்படுகிறது. பால் கூட்டுறவு சங்கங்கள் பால் உபபொருட்களை அதிகம் விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும், வியாபாரிகளுக்கு கமிஷன் தொகை அதிகரிப்பது குறித்து குழு அமைக்கப்பட்டு முடிவு செய்யப்படவுள்ளது. தரமான பால் கொள்முதல் செய்வதன் மூலம் ஊக்கத்தொகையாக ரூ.3 முதல் 4 வரை வழங்கப்படும், 16 சதவிதம் புரதம் உள்ள தீவணங்களை 20 சத புரதமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே விவசாயிகள் ஆவின் தீவணத்தை வாங்கவேண்டும்.

மேலும் இந்த ஆண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக போனஸ் வழங்கப்படும் பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லாபகரமாக இயங்குகிறது. விவசாயிகள் நலன்கருதி அனைத்து கிராமங்களிலும் பால்வளத்துறை மூலம் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு பால்வளத்துறை மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார்.

அதிருப்தி தெரிவித்த அமைச்சர்

முன்னதாக டிபிடி 81 வழுதலங் குணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மனோதங்கராஜ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என அதிருப்தி தெரிவித்த அவர் அதிகாரிகள் திருத்திக்கொள்ள வேண்டும் இல்லையேல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், ஆவின் உதவி பொது மேலாளர் ராஜ்குமார், கீழ்பெண்ணாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம், தாசில்தார் சரளா, ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!