திருவண்ணாமலை; நூலக கட்டிடம் மற்றும் அறிவுசார் மையம் திறப்பு
திருவண்ணாமலை நகராட்சியில் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி
திருவண்ணாமலை நகராட்சி, கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி, செய்யாறு நகராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் மற்றும் அறிவுசார் மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
விழாவில் அவர் பேசியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் புதிய கட்டிடங்கள், புதிய நீர் தேக்க தொட்டிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்ற திட்டங்களை இன்று துவக்கி வைத்துள்ளார் .
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 99 லட்சத்தில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டது. இதேபோல, கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி, இந்திரா நகரில் ரூ.98 லட்சத்தில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி மற்றும் திருவண்ணாமலை நகராட்சியில் இந்த அறிவு சார் மையத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார்கள். இந்த மையத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன . குறிப்பாக உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய நிலையில் இருப்பதற்கு டாக்டர் கலைஞரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு ஆரம்பக் கல்வியும், மூன்று கிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப்பள்ளியும், 5 கிலோமீட்டர் தொலைவில் உயர்நிலைப் பள்ளியும், 10 கிலோமீட்டர் தொலைவில் மேல்நிலைப் பள்ளியும் தொடங்கி வைத்ததன் காரணமாக மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்று இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
எதிர்காலத்தில் கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சமூக ஊடகங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்த்து அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டு இந்த நூலகத்தை நல்ல முறையில் பேணி காக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.
நிகழ்ச்சிகளில், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா, துணைத் தலைவா் ராஜாங்கம், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சித் தலைவா் சரவணன், துணைத் தலைவா் தமிழரசி, பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu