வேட்டவலத்தில் இரண்டு கோடி மதிப்பீட்டிலான பணிகள் துவக்கம்
பெருமாள் கோயில் சீரமைக்கும் பணியினை துவக்கி வைத்த துணை சபாநாயகர்
New Project Work Inauguration
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் ரூபாய்1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை மற்றும் ஒன்பதாவது வார்டு விழுப்புரம் சாலையில் பேரூராட்சியின் பின்புறம் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் கௌரி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் ,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு ரூபாய் ஒரு கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட உள்ள நவீன எரிவாயு தகனமேடை மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவர்கள் 186 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
மேலும் இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து விரிவாக்கப்பட்ட பைப் லைன்களை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் செங்குட்டுவன், இளநிலை பொறியாளர் ராமசாமி, இளநிலை உதவியாளர் மாலதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆவூா் ஸ்ரீவரதராஜப் பெருமாள்கோயில் சீரமைக்கும் பணி தொடக்கம்
ஆவூரில் உள்ள 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலை சீரமைக்கும் பணி தொடங்கியது.
முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதையடுத்து, கோயிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தா்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். பக்தா்களின் கோரிக்கையை ஏற்று ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் கோயிலை சீரமைக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து, நிதியையும் ஒதுக்கியது.
இந்த நிலையில், கோயில் சீரமைக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கான பூமி பூஜையில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
விழாவில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாகண்ணு , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu