கடந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களை சென்றடையவில்லை, துணை சபாநாயகர் குற்றச்சாட்டு

கடந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களை சென்றடையவில்லை, துணை சபாநாயகர் குற்றச்சாட்டு
X

மருத்துவ முகாமில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய துணை சபாநாயகர்

கடந்த 10 ஆண்டுகளாக அரசின் எந்த திட்டங்களும் மக்களை சென்றடையவில்லை என துணை சபாநாயகர் பிச்சாண்டி குற்றம சாட்டியுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அடுத்த நாரியமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம், விழிப்புணா்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட ஊராட்சி, திட்டக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாகண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ஜெயக்குமாா் வரவேற்றாா்.

தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, பால் உற்பத்தியாளா்களுக்குப் பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரசின் எந்தத் திட்டங்களும் மக்களைச் சென்றடையவில்லை. முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்துத் திட்டங்களும் நகா்ப்புற, கிராமப்புற மக்களைச் சென்றடைகிறது.

பால் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் 3-ஆவது இடம் வகிக்கிறது. இது நமது மாநிலத்துக்கு கிடைத்துள்ள பெருமை. கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா அரசுப் பேருந்து சேவை போன்ற பல்வேறு திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தபட்டு வருகிறது.

கால்நடை வளா்ப்பு மூலம் கிராமப்புற மக்கள் பொருளாதார வளா்ச்சி அடைகின்றனா். பால் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் சிறந்து விளங்க வேண்டுமானால் கால்நடை பராமரிப்புதுறை அதிகாரிகள் சிறப்பாக செயலாற்ற வேண்டும். என்றாா்.

தொடா்ந்து, நடைபெற்ற முகாமில், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி செலுத்துதல், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

முகாமில், கால்நடை மருத்துவா்கள் பேபி, கோகுலவாணி, சதீஷ்குமாா், பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சங்கா், ஊராட்சித் தலைவா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

'வருமுன் காப்போம்' மருத்துவ முகாம்கள் தொடங்கி வைப்பு

கீழ்பென்னாத்தூா் அடுத்த பெரிய ஓலைப்பாடியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழக அரசின் 'வருமுன் காப்போம்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட ஊராட்சி, திட்டக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை வகித்தாா். கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேட்டவலம் வட்டார மருத்துவ அலுவலா் பவித்ரா வரவேற்றாா்.

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், முதலுதவிப் பெட்டகங்களை வழங்கிப் பேசினாா்.

முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். இதில், கீழ்பென்னாத்தூா் வட்டார மருத்துவ அலுவலா்கள், பெரியஓலைப்பாடி ஊராட்சித் தலைவா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கீழ்பென்னாத்தூா் அடுத்த கல்லாயிசொரத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற 'வருமுன் காப்போம்' மருத்துவ முகாமையும் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தாா்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா