சாலை விபத்தில் உயிரிழந்த 3 காவலரின் உடல்களுக்கு அரசு மரியாதை

சாலை விபத்தில் உயிரிழந்த 3 காவலரின் உடல்களுக்கு அரசு மரியாதை
X

உயிரிழந்த காவலர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்திய மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ் பி

திருவண்ணாமலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 காவலரின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே நேற்று நடந்த விபத்தில் கர்நாடக காவல்துறையின் ஆயுதப்படையில் பணியாற்றும் 3 காவலர்கள் உயிரிழந்தனர் . மூவரின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மரியாதை. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, வெளிமாநில போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கர்நாடக மாநில சிறப்பு காவல் படையைச் சேர்ந்த உதவி கமாண்டன்ட் பிரபாகரா, சிறப்பு காவல் படை வீரர் ஹேமந்த், பாதுகாப்பாளர் விட்டல் ஆகியோர் தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உதவி கமாண்டன்ட் பிரபாகரா, சிறப்பு காவல் படை வீரர் ஹேமந்த், பாதுகாப்பாளர் விட்டல் மற்றும் சேலத்தில் பணிபுரியும் தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த தினேஷ், ஜெயக்குமார் ஆகியோருடன் ஜீப்பில் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றனர். ஜிப்பை போலீஸ்காரர் தினேஷ் ஓட்டிச் சென்றுள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை சேலம் நோக்கி கீழ்பென்னாத்தூா் வழியாகச் சென்றுகொண்டிருந்தனா்.

கீழ்பென்னாத்தூா் புறவழிச் சாலை, எம்.ஜி.ஆா். நகா் சந்திப்பு பகுதியில் வந்தபோது எதிரே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து போலீஸ் ஜீப் மீது நேருக்கு நோ் மோதியது. இதில் போலீஸ் ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்ஸின் முன்பக்கம் சேதமடைந்தது.

இந்த விபத்தில் போலீஸ் ஜீப் நொறுங்கியது. அதில் பயணம் செய்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கினா். பொதுமக்கள் அவா்கள் 5 பேரையும் மீட்க முயன்றனா்.

ஆனால், கா்நாடக சிறப்பு காவல் படை உதவி கமாண்டன்ட் பிரபாகரா, போலீஸ் ஜீப்பை ஓட்டிச் சென்ற தமிழக காவலா் தினேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த விட்டல், ஹேமந்த், ஜெயக்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் விட்டல் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மற்ற இருவரும் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விபத்தில் பலியான 3 பேரின் உடலும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர். பின்னர், விபத்தில் பலியான 3 பேரில் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தனித்தனி வாகனங்கள் மூலம் அவர்களுடடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!