கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
கீழ்பென்னாத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கார்த்திகேயன் உத்தரவின்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடந்து வருகின்றன.
கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக, கடந்த 2 மாதங்களில் மட்டும் 12 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, சிறுகொத்தான் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் சத்தியராஜ் என்ற மைக்கேல் , கடம்பை கிராமத்தை சேர்ந்த ஷேக் சவுகத்அலி மகன் ரகமதுல்லா, கலசபாக்கம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஷேக்பாபு மகன் ஷாஜன், திருவண்ணாமலை டவுன் வேட்டவலம் சாலை முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் யுவராஜ், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட 4 பேரும் தொடர்ந்து கஞ்சா வற்றபனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. எனவே, இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்குபரிந்துரை செய்தார்.
அதன்படி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மைக்கேல், ரகமதுல்லா, ஷாஜன், யுவராஜ் ஆகியோரை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி, வேலூர் மத்திய சிறையில் உள்ள 4 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை காவல்துறையினர் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu