தனியார் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கரும்பு கொள்முதல் பணத்தை வழங்கக்கோரி தனியார் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருகில் உள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் சர்க்கரை ஆலையில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் மற்றும் போளூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கரும்புகளை அரவைக்காக வழங்கினர்.
கரும்பை கொள்முதல் செய்த சர்க்கரை ஆலை நிர்வாகம் அதற்கான தொகை ரூ.11 கோடியை வழங்காமல் ஏமாற்றியது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டம் என கூறி தனியார் சர்க்கரை ஆலையை அதன் நிர்வாகம் மூடியது.
பாக்கி தொகையை வசூலிக்க விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவுப்படி பகுதி வாரியாக ஆலை ஏலம் விடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாக ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் ஆலையில் இருக்கும் எந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் சிலர் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மூடப்பட்டுள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை இன்றும் தொடர்ந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.11 கோடி கொள்முதல் தொகையை கொடுத்துவிட்டு பொருட்களை கொண்டு செல்லட்டும்' என்றனர்.
இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சர்க்கரை ஆலையில் இருந்து பொருட்களை எடுத்து செல்ல வந்த வாகனங்களை விவசாயிகள் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மேலும் விவசாயிகள் பலர் அங்கு வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டிஎஸ்பி அண்ணாதுரை உடனிருந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர், 'விவசாயிகளுக்கு பணம் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 10 நாட்கள் ஆலையில் இருந்து எந்த பொருட்களும் எடுத்து செல்லமாட்டார்கள். அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, ஆலையில் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் வெளியே சென்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். வாகனங்கள் வெளியே செல்லவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu