கீழ்பென்னாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம்

கீழ்பென்னாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம்
X

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கீழ்பென்னாத்தூரில் 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கீழ்பென்னாத்தூரில் உள்ள மார்க்கெட் கமிட்டி எதிரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ஏழுமலை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தா கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட அமைப்பாளர் நடராஜன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு போராட்டம் குறித்தும், 10 அம்ச கோரிக்கைகளை விளக்கியும் பேசினார்.

தமிழக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்

சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் நந்தன் கால்வாயுடன் இணைத்து அதற்கான நிதியை உடனடியாக செலுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மணிலா குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.5ஆயிரமும், உளுந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரமும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரமும், பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு ரூ.75-ம் வழங்க வேண்டும் என இவை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில் இயற்கை வேளாண் விவசாயிகள் கோதண்டராமன், கிருஷ்ணன், தன்னார்வலர்கள் பலராமன், கார்த்திகேயன், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தா, துணை செயலாளர் காமாட்சி, ஒன்றிய மகளிரணி செயலாளர் பிரியா, முன்னோடி விவசாயிகள் சுப்பிரமணியன், பரந்தாமன், சுந்தரமூர்த்தி உள்பட 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் கோபி என்ற கேசவன் நன்றி கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!