கீழ்பெண்ணாத்தூரில் தேர்தல் பணி குழு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கூட்டம்
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களிடம் படிவங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களை வழங்கிய துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் பணிக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு பேசினார்.
கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் சோமாசிப்பாடி கீழ்பெண்ணாத்தூர் மற்றும் கரிக்கலாம்பாடி ஆகிய இடங்களில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசனை கூட்டங்கள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் ,மாவட்ட பிரதிநிதிகள், நகர செயலாளர், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலோசனை கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சாவடி பொறுப்பாளர்களுக்கு வாக்காளர்கள் விவரங்கள் சேகரிப்பதற்கான படிவங்கள், வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது;
தேர்தல் காலத்தில் பணிகள் முன்பு போன்று இல்லாமல் இப்போது மாறிவிட்டது. நவீன காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணிகளை செய்ய தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மூன்று வகையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வருகிற 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் மூன்று மாத காலத்தில் வரவிருக்கிறது. ஒவ்வொரு வாக்கு சாவடி பொறுப்பாளர்களும் ஒதுக்கப்பட்ட 100 வாக்குகள் என்ற அளவில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களின் விவரம் குறித்த தகவல்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை ஒரு படிவத்தில் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். குடும்பத்தில் மொத்த உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டு ஆட்சி காலத்தில் அரசு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி ,பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி போன்ற விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். இதில் யார் யார் எந்த வகையில் பயன் பெற்றுள்ளனர் என்பது போன்ற விவரங்களையும் ஒவ்வொரு பொறுப்பாளரும் அவர்களின் தகவல்களை சேகரித்து பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கட்சி சம்பந்தப்பட்ட தகவல்களை வாட்ஸ் அப்பில் போடுவதை பார்த்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும் . ஒவ்வொரு பொறுப்பாளரும் அவர்களுக்கான பணிகளை விரைந்து முடித்து அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து ஐந்து தினங்களுக்குள் தேர்தல் பணி குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் ரவி ரெட்டியார் மாவட்ட மகளிர் அணி, தொண்டர் அணி, அமைப்பாளர்கள் சோமாசிப்பாடி குணசேகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், கிளை செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu