காதல் திருமணம் செய்த மகளின் இறப்பில் சந்தேகம்: கணவர் கைது

காதல் திருமணம் செய்த மகளின் இறப்பில் சந்தேகம்: கணவர் கைது
X

பைல் படம்.

வேட்டவலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டவலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டவலம் அருகே வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 23), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி புனிதா (20) இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற புனிதா குழந்தையுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் மோகன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க நேற்று முன்தினம் மாலை வந்தார்.

அப்போது புனிதாவின் தந்தை பாண்டுரங்கன் தனது மகள்களுக்கு பாணிபூரி வாங்கி தந்துவிட்டு நிலத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து வீட்டின் அருகே உள்ள மாலா என்பவர் புனிதா மயங்கிய நிலையில் கிடப்பதாக பாண்டுரங்கனுக்கு தகவலை தெரிவித்தார். மேலும் வீட்டில் இருந்த மோகன் வெளியே சென்று விட்டார். பாண்டுரங்கன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது புனிதா கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று புனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து பாண்டுரங்கன் வேட்டவலம் காவல் நிலையத்தில் தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக நேற்று புகார் செய்தார்

மேலும் திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து பாண்டுரங்கன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து புனிதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி ஒரு ஆண்டில் புனிதா இறந்ததால் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் மோகனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story