இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
X

உறுப்பு தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு மரியாதை செலுத்திய துணை சபாநாயகர் பிச்சாண்டி.

கீழ்பெண்ணாத்தூர் அருகே உடல் உறுப்பு தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது

கீழ்பெண்ணாத்தூர் அருகே உடல் உறுப்பு தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணையன், இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். கடந்த 21 ஆம் தேதி காலை மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் இருந்து சிந்திய தண்ணீரால் கால் தவறிக் கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த கண்ணையன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி கண்ணையன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கண்ணையனின் மகன் குமார் என்பவர் தனது தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இதைத்தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்ணையனின் உடலில் இருந்து கண்களை மட்டும் மருத்துவர்கள் தானமாகப் பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவித்ததைத் தொடர்ந்து, மாலை கண்ணையனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கண்ணையனின் உடலுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் தி.மு.க.வை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கிராம பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த பின்னர், உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களும் விழிப்புணர்வு ஏற்பட்டு உடல் உறுப்பு தானங்களைச் செய்ய முன்வந்திருப்பது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. கண்ணையனின் உடல் மண்ணுக்குச் சேர்ந்தாலும் அவரது கண்கள் இம்மண்ணில் வாழும் இன்னொரு நபர் மூலம் இனியும் உயிர் வாழும் என்பது அவரது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!