வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சுகுணா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால், மண்டல துணை வட்டாட்சியா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் வரவேற்றாா்.
கூட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் முத்தகரம் பழனிச்சாமி, அட்மா குழுத் தலைவா் சோமாசிபாடி சிவக்குமாா், இயற்கை விவசாயி கிருஷ்ணன், நீலந்தாங்கல் பாரதியாா் மற்றும் விவசாயிகள் பேசியதாவது:
அருணாச்சலா சர்க்கரை ஆலை நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும், கொசு தொல்லையை ஒழிக்க கொசு மருந்து அடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பிஎம் கிசான் நிலுவைத் தொகையினை தகுதியான விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், குறுவட்ட அளவில் கூட்டம் நடத்த வேண்டும், வேளாண் விரிவாக்க மையத்தில் பூஸ்டர் நுண்ணூட்டக் கலவையை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலை நிா்வாகம் 2013 முதல் 2017 வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு டன் ஒன்றுக்கான நிலவைத் தொகை ரூ.350-ஐ வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்டவலம் பேரூராட்சியில் குப்பைகளை அகற்ற வேண்டும். கொளத்தூரில் இருந்து நீலந்தாங்கல் வரையிலான நீா்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி, 15-ஆவது வாா்டு மயானத்தில் அடா்ந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டை ஒன்றுக்கு 75 கிலோவுக்கு பதிலாக 78 கிலோவாக எடை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தளவாய்குளம் வார சந்தையில் சரக்கு வாகனம் ஒன்றுக்கு ரூபாய் 150 வசூலிப்பதையும், ஆடு மாடு கோழி மற்றும் இதர பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதையடுத்துப் பேசிய வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தாா். கூட்ட முடிவில் வேளாண் அலுவலர் பிரியங்கா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu