கீழ்பெண்ணாத்தூரில் மக்களுடன் முதல்வர் முகாம், காலை உணவு திட்டம் துவக்கம்
மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கிய துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள பொல குணம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்து பேசுகையில், மக்களை தேடி என்ற முகாம் பத்து கிராமங்களை சேர்ந்து ஒரே இடத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை 15 நாட்களில் தெரிவிக்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். உங்களை தேடி அனைத்து அதிகாரிகளும் வரும்போது இந்த முகாமை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு நமது மாநிலத்தில் எண்ணற்ற திட்டங்கள் அதிக அளவு கிடைக்கிறது. ஆனால் அதை நாம் பயன்படுத்துவதில்லை, விவசாயத்தில் மணிலா அடிக்கிற இயந்திரம் வேளாண்மை துறையில் குறைந்த வாடகையில் கிடைக்கிறது. ஆனால் அதை எந்த விவசாயியும் பயன்படுத்துவதில்லை. வேளாண்மை துறைக்கு 15 டிராக்டர்களை வாடகைக்கு விட அரசு கொடுத்திருக்கிறது. ஆனால் யாரும் அதை வாடகைக்கு கேட்பதில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல் தேங்காய் பறிப்பதற்கு கூட ஒரு மிஷின் வந்திருக்கிறது அதையும் யாரும் பயன்படுத்துவதில்லை. விவசாய சங்கங்கள் இதையெல்லாம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறைந்த வாடகையில் கிடைக்கும் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என துணை சபாநாயகர் பேசினார்.
இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஆணையாளர் ரவிச்சந்திரன், தாசில்தார் சரளா, ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மதுராம்பட்டு ஊராட்சி ஆர்சிஎம் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை ஊராட்சிஒன்றியத்துக்குட்பட்ட மதுராம்பட்டு ஊராட்சியில் இயங்கிவரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியான ஆர். சி.எம். நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் வில்சன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, பள்ளி தாளாளர் சுபநாயகம் ஆகியோர் முன்னிலை வகிக்க பள்ளி தலைமையாசிரியர் சகாயராஜி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் காலை உணவு திட்டத்தை தொடங்கி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கினார். இந்த விழாவில் மதுராம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெரியநாயகம் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu