நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைப்பு

நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைப்பு
X

சேதப்படுத்தப்பட்ட  மேரிமாதா சிலை.

கீழ்பென்னாத்தூரில் நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் கருங்காலிகுப்பம் சாலை அருகில் உள்ள அந்தோணியார் தெருவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மேரி மாதா சிலை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தினமும் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் மேரி மாதா சிலையை உடைத்துள்ளனர். மேலும் அதன் அருகில் சாலையோரம் வசிக்கும் முருகன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் இன்டிகேட்டர்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தது. காலை அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் மேரி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில் ஒருவர் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாதா சிலையை உடைத்தது கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள நாரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜி (வயது 39) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விஜியை போலீசார் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியதாகவும், கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!