கீழ்பெண்ணாத்தூரில் கலைத்திருவிழா: துணை சபாநாயகர் பங்கேற்பு
கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கலைத் திருவிழா.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது
இதில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், இசை, நடனம், தமிழ் பேச்சுப் போட்டி, ஆங்கில பேச்சுப்போட்டி, பரதம், குழு நடனம், இசை உள்பட 37 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து கலைத்திருவிழா நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ,காளிதாஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், வேட்டவலம் பேரூராட்சி துணைத்தலைவர் ரங்கன் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், 3-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் கலை ஆர்வத்தையும் திறனையும் வளர்த்துக் கொள்ளும் வகையிலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் கலைத் திருவிழாவை தொடங்கி நடத்தி வருகிறது. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வாழ்த்துகிறேன், இவ்வாறு துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.
விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேசுகையில், மாணவர்கள் கல்வியோடு எந்த துறையில் ஆர்வமாக இருக்கிறதோ அதில் முழு கவனம் செலுத்தி சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். அடுத்த தலைமுறையினரை உருவாக்குகின்ற சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. அடிப்படைக் கல்வி உங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்ற நிகழ்ச்சி தான் கலைyf திருவிழா ஆகும்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பள்ளி கல்வித்துறைக்கு 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று எதிர்காலத்தில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என பேசினார்.
இதில் கீழ்பென்னாத்தூர், கொளத்தூர் ஆகிய மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவை ஜமீன்அகரம் பள்ளி தலைமைஆசிரியர் முருகன் தொகுத்து வழங்கினார். முடிவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வம் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu