திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி வெள்ளி விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி வெள்ளி  விழா
X

ஸ்ரீசெல்லியம்மன் கோயில் 108 பால்குட ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆடி வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் அடுத்த வசூா் கிராமத்தில் திருவண்ணாமலை -வேலூா் சாலையில் பழைமை வாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 4-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி 108 பால் குடம் ஊா்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு வெள்ளிக்கிழமை காலை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதைடுத்து, மேளதாளத்துடன் 108 பால்குடம் ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று செல்லியம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிற்பகல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த சிறுமூா் கிராமத்தில் பழைமையான சிறுபாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 4-ஆம் வெள்ளித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு 28-ஆவது ஆடி 4-ஆம் வெள்ளித் திருவிழா அண்மையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதன்படி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்து பக்தா்கள் வழிபட்டனா். விழாவின் முக்கிய நிகழ்வாக பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.

இதையடுத்து, கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். பிற்பகல், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் பக்தா்கள் உடலில் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் தொங்கியவாறு வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தனா். சில பக்தா்கள் முதுகில் அலகு குத்தி லாரி, டிராக்டா், வேன், காா் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து நோத்திக்கடன் செலுத்தினா். இரவு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வானவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், ஒன்றியக் கவுன்சிலா் அனிதா செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் சூரியகலா சுந்தரம், விழாக் குழுத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச்சோந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வேட்டவலம்

வேட்டவலம் பேருந்து நிலையத்தில் உள்ள பழைமையான ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பூ கரகம், தீச்சட்டி எடுத்து பக்தா்கள் வீதியுலா வந்தனா். இதையடுத்து, மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவா் ஸ்ரீமுத்துமாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த உற்சவரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பிற்பகல் 2 மணிக்கு கூழ்வாா்த்தல் திருவிழா நடைபெற்றது.

காலை முதல் இரவு வரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் வேட்டவலம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!