கீழ்பெண்ணாத்தூர் வங்கியில் தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்ட கீழ்பெண்ணாத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் கருங்காலி குப்பம் செல்லும் சாலையில் ஏடிஎம் வசதியுடன் கூடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
எப்போதும் இந்த சாலையில் பரபரப்பான போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் காணப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாடிக்கையாளர்களுக்கான பணிகள் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வங்கி நேரம் முடிந்து மேலாளர் உள்பட வங்கி ஊழியர்கள் அனைவரும் வங்கியை பூட்டிக்கொண்டு வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சுமார் ஒரு மணி அளவில் வங்கியின் உட்புறம் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்து காரணமாக வங்கியில் இருந்து பெரும் அளவிலான புகை வெளியேறிய காரணத்தால் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் புகை நாற்றம் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விபத்து நடந்த வங்கிக்கு விரைந்து சென்றனர் .அங்கு இது குறித்து போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கும் ,வங்கி மேலாளர் லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஆகியோருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் மதியழகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வங்கிக்குள் சென்று தீயை அனைத்தும் தீயை கட்டுப்படுத்தியும் மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அளவில் நடக்கவிருந்த தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
வங்கியில் உள்ள கவுன்டர் உடன் காசாளர் பகுதிக்கு முன்புறம் உள்ள தரையில் வைக்கப்பட்டிருந்த பழைய பதிவேடுகள் மற்றும் வங்கியில் உபயோகிக்கப்பட்ட சலான்கள் தீ விபத்தில் எரிந்து கருகின . மேலும் கவுன்டர் பகுதியில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு கம்ப்யூட்டர் முற்றிலுமாக எரிந்தது. இது குறித்து வங்கி மேலாளர் கீழ்பெண்ணாத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார் .
மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. உரிய நேரத்தில் தீ பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அணைக்கப்பட்டதால் வங்கி வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின.
தீ விபத்து காரணமாக நேற்று வங்கிப் பணிகள் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் வங்கி மேலாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்து கீழ் பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக இந்த வங்கிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் சோமாசிபாடி கிளை வங்கியில் தற்காலிகமாக பணம் பரிவர்த்தனை செய்து கொள்ள அறிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu