திருவண்ணாமலை அருகே பணம் இரட்டிப்பு மோசடி செய்த 4 பெண்கள் கைது
பணம் இரட்டிப்பு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பெண்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் . இவரது உறவினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மலையனூர் அருகில் உள்ள கொடுக்கன் குப்பன் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி லட்சுமி , இவரும் அவரது உறவினர் திருவண்ணாமலை தாலுகா மங்கலத்தை சேர்ந்த முனுசாமி மனைவி அமிர்தம் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு ரங்கநாதனின் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது அவர்கள் ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் அந்த பணத்தை திருப்பி கொடுக்கும் போது 2 மடங்காக கொடுத்து விடுகிறோம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி ரங்கநாதன் தான் வைத்திருந்த ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் மற்றும் அவரது மனைவி புஷ்பாவின் 21 பவுன் நகையையும் கொடுத்து உள்ளார். இதையடுத்து 1 வருடங்களுக்கு மேலாகியும் பணத்தை திருப்பி கொடுக்காததால் லட்சுமியை ரங்கநாதன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் லட்சுமியும், அமிர்தமும், அவர்களது உறவினர்கள் மங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி லதா , சக்திவேல் மனைவி சசிகலா ஆகியோரை ரங்கநாதனின் வீட்டிற்கு அழைத்து வந்து அவரிடம் லதா மற்றும் சசிகலாவை அறிமுகம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கும் ரூ.10 லட்சம் தருமாறும் அந்த பணத்துடன் ஏற்கனவே வாங்கிய பணத்துடன் சேர்த்து 2 மடங்காக கொடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
அதையும் நம்பி அவர் ரூ.70 ஆயிரத்தை அமிர்தத்திடமும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை சசிகலாவிடமும், 6 பவுன் நகையை லதாவிடம் கொடுத்து உள்ளார். பின்னர் 6 மாதமாகியும் பணத்தை தராததால் ரங்கநாதன் லட்சுமிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது லதாவிற்கு ஆரணியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.3 கோடியே 57 லட்சம் வர உள்ளது. இந்தபணம் வந்தவுடன் பணத்தை 2 மடங்காக கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் மாதக்கணக்கில் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் ரங்கநாதன் அவர்களை நேரில் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார்.
அதற்கு அவர்கள் பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை போல் 20-க்கும் மேற்பட்டவர்கள் பல லட்சம் ரூபாய் அவர்களிடம் கொடுத்து ஏமாந்து உள்ளதும் அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் மோசடி சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லட்சுமி, அமிர்தம், லதா, சசிகலா ஆகிய 4 பேரும் ரங்கநாதனிடம் ஆசைவார்த்தை கூறி ரூ.17 லட்சத்து 55 ஆயிரம் மற்றும் 27 பவுன் நகைகள் பெற்று மோசடி செய்து உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் போலீசார் கூறுகையில், அவர்கள் இதேபோல் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆசைவார்த்தை கூறி சுமார் ரூ.3 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்க வாய்ப்புகள் உள்ளது என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu