திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 33,517 வாக்காளர்கள் சேர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டார். இதில், 20 லட்சத்து 59 ஆயிரத்து 706 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2023-ம் தேதியை அடிப்படையாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான முருகேஷ் வெளியிட்டார். அதனை திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரும், வாக்காளர் பதிவு அலுவலருமான மந்தாகினி பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், செய்யார், வந்தவாசி, போளூர், கலசப்பாக்கம், ஆரணி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 9 ஆயிரத்து 411 ஆண்களும், 10 லட்சத்து 50 ஆயிரத்து 180 பெண்களும், 115 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 20 லட்சத்து 59 ஆயிரத்து 706 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
மேலும் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதியன்று வரைவு வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது. அதன் மூலம் 77 ஆயிரத்து 191 படிவங்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, 33 ஆயிரத்து 517 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 27 ஆயிரத்து 96 வாக்காளர்கள் இறப்பு, இடம் பெயர்வு, இருமுறைப்பதிவு என்ற அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களுக்கு பார்வைக்கு வைக்கப்படும்.
மேலும் https://www.election.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்து கொள்ளலாம். தற்போது வரை வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில் 69 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண் இணைக்க படிவம் "6 பி" சமர்பித்து உள்ளனர். மீதம் உள்ள வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டும். வருகிற 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. வாக்காளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் தின விழாவில் கலந்துகொண்டு வாக்காளர் உறுதி மொழியை ஏற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெற்றிவேல், குமரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu