கிரிவலப் பாதையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது
திருவண்ணாமலை கிரிவல பாதையில் பைக் மீது நின்றபடி சாகசத்தில் ஈடுபட்டதாக சாகச வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் ஒருவர் வெளியிட்டார். கிரிவல பாதையில் பக்தர்கள் அமைதியாக நடந்து செல்லும் சூழலில், அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி சாகச வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்ட திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் சாகசம் செய்த வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த அஜித் என்பவர் வீடியோ எடுத்து வெளியிட்டது தெரிய வந்தது. இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளி ஆவார். ஐபிசி சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிந்து, பைக் சாகசம் செய்த வாலிபர் அஜித்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தூய்மை பணியாளர் வீட்டில் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி கீதா, இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கீதா அதே கிராமத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 31ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு தனது மகன்களுடன் சென்று இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை கீதா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கீதாவிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கீதா உடனே வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்ததாம்.
மேலும் அதில் வைத்திருந்த மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. வீட்டில் வேறு ஆட்கள் இல்லாததால் இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தூசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu