செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு தாலுகா பெரும்பள்ளம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவி மகாலட்சுமியின் கணவர் பத்மநாபனை சில இளைஞர்கள் தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த பத்மநாபன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பத்மநாபனை தாக்கியதாக கருணாகரன், ஆறுமுகம், ரமேஷ், ஏகாம்பரம், பசுபதி ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஆனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. உள்ளூரில் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்களை ஒரு மாதமாகியும் போலீசார் கைது செய்யவில்லை என்றும் எனவே அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி செய்யாறு நகர போலீஸ் நிலையத்தை பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்து வந்த வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தூசி கே.மோகன், நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளா் மோகனிடம் வழக்கு குறித்து கேட்டறிந்து, எதிரிகள் ஏன் கைது செய்யப்படவில்லை என்றும், இரு தினங்களுக்குள் அவா்கள் கைது செய்யப்படவில்லை என்றால், பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றாா்.
அப்போது, உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் போலீஸாா் முற்றுகையில் ஈடுபட்டவா்களிடம், இதுகுறித்து டி.எஸ்.பி.யின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu