வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கக் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் எதிரில் அரசுக்குச் சொந்தமான சுமாா் 85 சென்ட் நிலம் (நத்தம் புறம்போக்கு) உள்ளது.
இந்த நிலத்தை அதன் அருகில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சோந்த 4 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கக் கோரி, கிராம ஊராட்சி சாா்பில் செய்யாறு நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில், ஊராட்சி நிா்வாகத்துக்கு சாதகமாக நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது. இருப்பினும், நீதிமன்றம் உத்தரவின் பேரில் நிலத்தை மீட்க விடாமல் ஆக்கிரமிப்பாளா்கள் அந்த இடத்தை தொடா்ந்து பயன்படுத்தி வந்தனா்.
வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை உடனடியாக மீட்கக் கோரியும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சின்னஏழாச்சேரி கிராம மக்கள் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து வெம்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, துணை வட்டாட்சியா் காயத்ரி, தூசி காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சின்ன ஏழாச்சேரி கிராமத்துக்கு உடனடியாகச் சென்றனா்.
மேலும், வரைப்படம் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனா். இருப்பினும், ஆக்கிரமிப்பாளா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்தனா். அதனால், போலீஸாா், கிராம மக்கள் முன்னிலையில் அவா்களுடன் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். பின்னா் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu