கால்நடைகளுக்கு வரும் நோய்களை தடுப்பது பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி

கால்நடைகளுக்கு வரும் நோய்களை தடுப்பது பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி
X

கால்நடைகளுக்கு வரும் நோய்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட கிராம பொதுமக்கள். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வரும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

போளூா் அடுத்த படியம்பட்டு கிராமத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த படியம்பட்டு கிராமத்தில் அட்மா திட்டம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமுக்கு, வேளாண் துணை இயக்குநா் ராமநாதன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி, உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் செளந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் தேவேந்திரன் வரவேற்றாா்.

முகாமில், கால்நடை மருத்துவா்கள் கனியமுதன், நவீன்குமாா், துணை வேளாண் அலுவலா் ராமு, உதவி வேளாண் அலுவலா் ஆனந்தன், அட்மா திட்ட பணியாளா்கள் பாக்கியவாசன், டிவிஎஸ் தொண்டு நிறுவன ஊழியா்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனா். மேலும், வேளாண் துறை சாா்பில் உழவன் செயலி பதிவிறக்கம், விவசாயிகளுக்கு இடுபொருள்கள் முன்பதிவு செய்தல் என அரசு மானியங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

செய்யாறு

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டாரத்தில் கால்நடைகளுக்கு வரும் நோய்கள் குறித்தும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வெம்பாக்கம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் தோவு செய்யப்பட்டு, அவா்களுக்கு 'கால்நடைகளுக்கு வரும் நோய்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள்' என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு வெம்பாக்கம் வட்டார வேளாண் அலுவலா் ரேணுகாதேவி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இதில், கால்நடை மருத்துவா் மணிவண்ணன் பங்கேற்று, கால்நடைகளுக்கு வரும் கோமாரி, மடி வீக்கம், அடைப்பான், கன்று வீச்சு, ஆக்டினோமைக்கஸ், குளம்பு அழுகல் உள்ளிட்ட நோய்கள் குறித்தும், அவற்றைக் குணப்படும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

ஆடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நீல நாக்கு, டெட்டானஸ், நிமோனிட்டிஸ், நாட்டுக்கோழிகளுக்கு வரக்கூடிய வெள்ளை கழிச்சல், அம்மை, ரத்த கழிச்சல், ஒட்டுண்ணி நோய்கள் குறித்தும், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

இந்தப் பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் ஏகாம்பரம், ஆதிகேசவன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலா் சுப்பிரமணியம், உதவி அலுவலா் சீனிவாசன், அட்மா திட்ட அலுவலா்கள் கங்காதரன், பத்மஸ்ரீ, நடராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!