பாய் வியாபாரி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

பாய் வியாபாரி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி
X
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செய்யாறில் நடுரோட்டில் பாய் வியாபாரி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

செய்யாறு தாலுகா விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாபாஷா (வயது 45), பாய் வியாபாரி. இவர் தனது மகன்களுடன் மோட்டார்சைக்கிளில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக எதிரே செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் பர்கத் (45), இம்ரான் (20) ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இரு மோட்டார்சைக்கிளும் சர்க்கரை ஆலை அருகில் நேருக்கு நேர் மோதி கொண்டன.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமரசம் செய்து வைத்து அனுப்பினர். அங்கிருந்து புறப்பட்டு ராஜாபாஷா தனது மகன்களுடன் மோட்டார்சைக்கிளில் வந்தவாசியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வீரம்பாக்கம் கூட்ரோடு அருகில் நேற்று சென்றபோது, மீண்டும் காரில் வந்த இம்ரான் மற்றும் நண்பர்கள் என 7 பேர் கொண்ட கும்பல் ராஜாபாஷாவை வழிமறித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் மகன் பிரதோஷ் உள்பட 3 பேரும் காயம் அடைந்து செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதேபோல் காயமடைந்த மெக்கானிக் இம்ரான் மற்றும் நண்பர்கள் செய்யாறு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடைேய, ராஜாபாஷா திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியே சென்று செய்யாறு-ஆற்காடு சாலையில் நடு ரோட்டில் நின்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை அவர் மீது ஊற்றி தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டனர். அப்போது அவர், தன்னை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜாபாஷாவிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அவரை, மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!