திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X

வன காப்பாளரை தாக்கிய பீகார் வாலிபர் கைது

Crime News in Tamil -தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் பொருட்கள் வழங்காததால், நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Crime News in Tamil -தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் பலர், பலவிதங்களில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மாதம் 100 ரூபாயில் இருந்து, ரூ.20 ஆயிரம் வரையில் மாத தவணை மற்றும் ஒரே தவணை என அறிவிக்கின்றனர். அதில் முதலீடு செய்பவர்களுக்கு, மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்துவிடும் முகவர்களுக்கு, நபர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பல சலுகைகள் அறிவித்து, பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனம் தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டிய பொருட்களை வழங்க, காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் திட்டத்தில் பணம் செலுத்திய பொதுமக்கள், தங்களின் ஏஜன்டுகளை பொருட்களை பெற்று தரும்படி நெருக்கடி கொடுத்ததால் ஏஜென்டுகள் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு, நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களுக்கு சேர வேண்டிய பொருட்களை வழங்குவதாக, நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறி பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தீபாவளி சிறுசேமிப்பு, பலகார சீட்டு என்ற பெயர்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று லட்சக்கணக்கில் பணவசூல் செய்யப்பட்டு, தீபாவளி நெருங்கும் வேளையில், பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். தொடர்ந்து, இதுபோன்ற மோசடி நபர்களை நம்பி ஏமாறக் கூடாது என, தொடர்ந்து போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

வனக்காப்பாளரை தாக்கியவர் கைது

செங்கம் அடுத்த தாழையூத்து, பெண்ணை ஆறு வனப்பகுதியில் வனத்துறை அலுவலர் பொன்னுரங்கம், ரோந்து சென்றார். அங்கே சுற்றித்திரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர், அவரை கடுமையாக தாக்கியுள்ளார் இதில் காயமடைந்த பொன்னுரங்கம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வன அலுவலர் ராமநாதன் தலைமையிலான வனத்துறையினர் தாழையூத்து பகுதியில் உள்ள பொது மக்களிடம் தமிழ் பேசத் தெரியாத நபர் சுற்றி வருவது குறித்து தகவல் அளிக்குமாறு தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் தாழையூத்து கிராமம் அருகே உள்ள பெண்ணை ஆறு பகுதியில் சுற்றி திரிந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்த்தி மண்டல் என்ற வாலிபரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். மேலும் வனக்காப்பாளரை தாக்கிய பீகார் மாநில நபரிடம், ஸ்பேனர், கோவில் மணி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதாகவும் அந்நபரை போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை என எடுக்கப்படும் என வனத்துறை அலுவலர் ராமநாதன் தெரிவித்தார்.

வைப்பு நிதியில் கையாடல்

செங்கம் தாலுாகா, மணிக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல், கீழ்பென்னாத்தூர் மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக உள்ளார். கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, திருவண்ணாமலை தபால் கோட்ட உதவி கண்காணிப்பாளர் சாமிநாதன், மலப்பாம்பாடி தபால் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது போஸ்ட் மாஸ்டர் முருகன் ரூ.18,777 கையாடல் செய்தது தெரியவந்தது. முருகன் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலரிடம் வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு போன்றவை தொடங்க வைத்து, அவர்களிடம் பணம் பெற்று, அதை அவர்களுடைய கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாமிநாதன், கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

கீழ்பென்னாத்தூர் பள்ளிகொண்டாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 34. இவர் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டதால், திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், தங்கவேலுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சாராய ஊறல்களை அழித்த போலீசார்

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் உத்தரவுப்படி, டி.எஸ்.பி அஸ்வினி மேற்பார்வையில் வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார், காடகமான் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பாறை அருகில் 2 தொட்டியில் சாராய ஊறல் இருந்ததை கண்டறிந்து, அதனை அதே இடத்தில் கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் ஊறல் வைத்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து வனப்பகுதிகள் மட்டுமின்றி, அப்பகுதிகளில் உள்ள சந்தேகப்படும்படியான இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி ரமேஷ் மேற்பார்வையில், செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில், போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், இராந்தம் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற நபர்களை மடக்கி பிடிக்க முயற்சித்த போது தப்பி ஓடிவிட்டனர். அவர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் மதுபான பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!