நிதி நிறுவன மோசடி: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் அலுவலகம் வைத்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றை கணவன்- மனைவி ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் மூலம் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், மளிகை பொருட்கள் வழங்கம் திட்டம் , குழுக்கள் சீட்டு மற்றும் ஆறு மாத நகை சீட்டு போன்றவை நடத்தப்பட்டது. இதில் ஏஜெண்டுகளாக திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு மட்டுமின்றி, சென்னை, கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்தனர்.
மேலும், அவர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இந்த சீட்டில் இணைத்து அவர்களிடம் இருந்து ரூ.100 முதல் 4,000 வரை மாதத் தவணையாக 20 மாதங்களுக்கும் மேலாக வசூல் செய்து நிதி நிறுவனத்தில் வழங்கி வந்துள்ளனர். ஆனால், நிதி நிறுவனத்தினர் அவர்களுக்கு வழங்க வேண்டிய நகையையும், மளிகை பொருட்கள் அனைத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனராம்.
தற்போது அவர்கள் தலைமறைவு ஆகிவிட்டனர். மேலும் அலுவலகத்தையும் மூடி விட்டனர். இதனால் ஏஜென்ட்களிடம் பணம் கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்டு ஏஜென்ட்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த நிலையில், நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான தொகையை பெற்றுத் தர வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி, மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் செய்யாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடரும் தனியார் சீட்டு கம்பெனி மோசடிகளை ஆய்வு செய்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், வந்தவாசி, செய்யாறு நகரங்களில் செயல்பட்டு வந்த தனியார் சீட்டு நிறுவனம் தீபாவளி, பொங்கல், திருமண சீர்வரிசை என ஏழை, எளிய மக்களிடம் வசூலித்த பல கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு தப்பியோடிய மோசடி நபர்களை கைது செய்ய வேண்டும் .மோசடியில் ஈடுபட்டவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். பணம் மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தனியார் சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் முருகேசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu