திருவண்ணாமலை அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பால் சலசலப்பு
உதவி கலெக்டரிடம் மனு வழங்கிய விவசாயிகள்.
செய்யாறு சிப்காட் தொழில்பேட்டைக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீா்குன்றம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிா்ப்பு விவசாயிகள் இயக்கம் சாா்பில், ஜூலை 1-இல் இருந்து தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும், 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு டவுன் புறவழி சாலையில் அமைந்துள்ள சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஆர்.அனாமிகா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
டி.எஸ்.பி.க்கள் காா்த்தி (வந்தவாசி), வெங்கடேசன் (செய்யாறு), வட்டாட்சியா் முரளி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்த கூட்டத்தில் மேல்மா சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள் மட்டுமே இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் இங்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் உள்ளனர். இதனால் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அமைதி பேச்சு வார்த்தை சலசலப்பில் முடிந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu