செய்யாறு அருகே குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழப்பு சம்பவத்தால் பரபரப்பு
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கடையில் வாங்கி குடித்த 10 ரூபாய் குளிர்பானத்தால் 6 வயது சிறுமி உயிர் இழந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி ஜோதிலட்சுமி இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ரித்தீஷ் (வயது9) என்ற மகனும் காவியா ஸ்ரீ (வயது 6) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மகன் ரித்திஷ் நான்காம் வகுப்பும் மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காவியா ஸ்ரீ நேற்று வீட்டின் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் 10 ரூபாய் மதிப்பிலான குளிர்பானம் ஒன்றை வாங்கிக் குடித்துள்ளார்.
இதனை குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வாய், மூக்கில் இருந்து நுரை வெளியேறியபடி சிறுமி மயங்கி விழுந்துள்ளாராம். இதனை பார்த்த சிறுமியின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ்குமார் அளித்த தகவளின் பேரில் தூசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே குளிர்பானம் குடித்தால் உயிரிழந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனுமா என தெரியவரும். இதனிடையே செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளிர்பானம் வாங்கிக் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். யாருக்கும் தெரியாமல் அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாக யாரும் தெரியாமல் விலை குறைந்த குளிர்பனங்களாக இருந்தாலும் உணவுப் பொருட்களாக இருந்தாலும் அவ்வப்போது கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவண்ணாமலை நடந்த சம்பவம் குறித்து அறிந்து திருவண்ணாமலை டிஓவிடம் சொல்லி இருக்கிறோம். அது போல உணவுப் பொருட்களாக இருந்தாலும் குளிர்பானமாக இருந்தாலும் அதில் ஒரு மாதிரியா எடுத்து பகுப்பாய்வு செய்யும் நிலையம் வாகனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.
அந்த குளிர்பான மாதிரி எடுத்து ஆய்வு செய்து தர கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் நச்சுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu