தந்தையின் இறப்பு சான்று கேட்டு தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்

தந்தையின் இறப்பு சான்று கேட்டு தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்
X

திலகவதி

தந்தையின் இறப்பு சான்று கேட்டு செய்யாறு தாலுகா அலுவலகத்தில் விதவை பெண் ஒருவர் தாலி, கம்மலை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

தந்தையின் இறப்பு சான்று கேட்டு செய்யாறு தாலுகா அலுவலகத்தில் விதவை பெண் ஒருவர் தாலி, கம்மலை கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் திலகவதி. கணவர் இறந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தனது தந்தையின் இறப்பு சான்று கேட்டு செய்யாறு வருவாய்த் துறை அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்துள்ளார்.

திலகவதியின் தந்தை 1972-ம் ஆண்டு இறந்துள்ளதால் அப்போது இறப்பு குறித்து பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் சான்று வழங்குவது குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி கடந்த வருடம் நவம்பர் மாதம் 30-ந் தேதி செய்யாறு வருவாய்த் துறை அலுவலகம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு தொடர்ந்து மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதுநாள் வரையிலும் இறப்பு சான்றுகள் வழங்கப்படவில்லை என்றும் வருவாய்த் துறையினரிடம் கேட்டால் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கேட்கும் படி அனுப்பி வைப்பதாகவும் தாசில்தார் அலுவலகத்தில் சென்று கேட்டால் மீண்டும் வருவாய்த்துறையினர் அலுவலகத்தில் சென்று கேட்கும் படி மாறி மாறி அலை கழிப்பதாகவும் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்குமோ என்கிற மனநிலைக்கு திலகவதி வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லாததால் தன்னிடமிருந்த தனது தாலி மற்றும் கம்மல் ஆகியவைகளை தாலுகா அலுவலகத்தில் அதிகாரியிடம் கொடுத்து சான்றிதழ் கேட்டுள்ளார். இதை திலகவதியுடன் சென்ற அதே கிராமத்தை சேர்ந்த நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

இது குறித்து தாசில்தார் வெங்கடேசனிடம் கேட்டதற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே திலகவதியின் மனுமீது விசாரணை நடத்தி அதற்கான பதிலை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

செய்யாறு உதவி ஆட்சியர் அனாமிகா கூறுகையில், இந்த மனு மீதான விசாரணையில் மனுதாரரின் தந்தை பரசுராமன் என்பவருக்கு 5 வாரிசுதாரர்கள் இருப்பதால், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆட்சேபனை உள்ளதா? என விசாரணைக்கு வரும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திலகவதியின் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!