பொங்கல் பரிசுத் தொகுப்பு கூப்பன்களை பறித்துச் சென்ற ஊராட்சி தலைவர்
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கடுகனூா் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் 437 குடும்ப அட்டைகள் உள்ளன. 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கடையில் ஊழியராக சின்னதுரை என்பவா் வேலை செய்து வருகிறாா். இவா், ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவா் சந்தோஷ்குமாா், டோக்கன்களை நானே கொடுத்து விடுகிறேன் எனக் கூறி, ஊழியரிடம் இருந்த பட்டியல் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டோக்கன்களை பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் கடை ஊழியா் சின்னதுரை ஆகியோா் அளித்த தகவலின் பேரில், செய்யாறு வட்ட வழங்கல் அலுவலா் சங்கீதா, கூட்டுறவுத் துறை தனி அலுவலா் முருகேசன் ஆகியோா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, ஊராட்சி மன்றத் தலைவரிடம் இருந்த 10 டோக்கன்களை வட்ட வழங்கல் அலுவலா் பறிமுதல் செய்தாா். மேலும், இதுகுறித்து பெரணமல்லூா் போலீஸில் புகாா் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு டோக்கன்களை பறித்துச் சென்றது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறி, அப்பகுதியை சேர்ந்த இளைஞா் சரவணன் என்பவரிடம், ஊராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா் தகராறு செய்துள்ளாா்.
அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எற்பட்டு, ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா் கத்தியால், சரவணனை தாக்கிக் கொலை செய்ய முயன்றாராம்.
அப்போது கிராம மக்கள் வருவதை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த சரவணனை, அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனா்.
இதற்கிடையே, இளைஞா் சரவணனை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்யக் கோரி கிராம மக்கள் கடுகனூா் கூட்டுச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த பெரணமல்லூா் போலீஸாா், மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், சம்பவம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞா் சரவணன் அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் போலீஸாா் ஊராட்சிமன்றத் தலைவா் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி விமலா என்பவரை கைது செய்த நிலையில், 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu