செய்யாறு மாவட்ட கல்வி அலுவலகத்தில் அமைச்சர் திடீர் விசிட்
மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் கல்வி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கல்வி துறையின் கீழ் வழங்கப்படும் விலையில்லா நல திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்து ஆலோசனைகளை வழங்கினார் இந்நிலையில் செய்யாறு பகுதிக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
செய்யாறு மாவட்ட கல்வி அலுவலகத்தின் நடைமுறைகள், செயல்பாடுகள், கோப்புகள், மற்றும் கணினி வழியாக பள்ளிக் கல்வித் துறைக்கான செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து, பார்வையிட்டார். மேலும் இரண்டாம் பருவத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப் புத்தகங்களில் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பணியாற்றும் அலுவலக அடிப்படை வசதிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அலுவலகம் அருகில் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தொடக்க கல்வி அலுவலகங்கள், தனியார் பள்ளி கல்வி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும், ஆரணியில் அமைந்துள்ள ஸ்மார்ட் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பள்ளி வளர்ச்சிக்காக அதிகாரிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வாசுகி, அலுவலக கண்காணிப்பாளர்கள் நந்தகோபால், கமலக்கண்ணன், இளநிலை உதவியாளர் ஆனந்தன், பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர்கள், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu