செய்யாறு பகுதியில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் : சீமான்

செய்யாறு பகுதியில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் : சீமான்
X

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (பைல் படம்)

செய்யாறு பகுதியில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் விளை நிலங்களை அழித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா கிராமத்தில் புதிய தொழிற் வளாகம் ( சிப்காட்) அமைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாக தொழில் வளாகம் அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 3174 ஏக்கர் வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 125 நாட்களாக விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தங்கள் தாய்நிலத்தை தற்காக்க போராடும் அப்பாவி ஏழை விவசாயிகள் மீது திமுக அரசு வழக்கு தொடுப்பதும், கைது செய்து சிறையிடைப்பதும், போராட்ட முகாம்களை வலுக்கட்டாயமாக அகற்றுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடிவரும் வேளாண் மக்களின் உரிமைக் குரலுக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்கும் திமுக அரசின் செயல் கொடுங்கோன்மையாகும்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்து மக்கள் போராடியபோது, மக்களுக்கு ஆதரவாக நிற்பதாக நாடகமாடிய திமுக, தற்போது ஆட்சி, அதிகாரத்திற்கு வந்தவுடன் எட்டு வழிச்சாலை திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற முயல்வதும், கோவை – அன்னூர், திருவண்ணாமலை – பாலியப்பட்டு, செய்யாறு - மேல்மா உள்ளிட்ட இடங்களில் வேளாண் மக்களின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களை அபகரித்துத் தொழில் வளாகம் அமைக்க முயல்வதும் திமுக அரசின் பச்சை துரோகத்தையே வெளிக்காட்டுகிறது

கடந்த 125 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களின் கோரிக்கை குறித்து எவ்வித பேச்சுவார்த்தை நடத்த முன்வராத திமுக அரசு, அமைச்சர்கள், மற்றும் காவல் துறையினரைக் கொண்டு உழைக்கும் மக்களை மிரட்டுவது சிறிதும் மனச்சான்றற்ற அரச வன்முறையாகும்.

ஆகவே, மக்களின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விளைநிலங்களை அபகரிக்கும் கொடுஞ்செயலை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், தங்களின் நில உரிமைக்காகத் தொடர்ந்து போராடிவரும் மேல்மா சுற்றுப்புற கிராம மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் வெற்றிபெறவும், அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை வெல்லவும் நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்துத் துணைநிற்கும் என சீமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!