இளைஞர் போராட்டத்தால் டாஸ்மாக் கடை தற்காலிக மூடல்

தா்னாவில் ஈடுபட்ட மணிகண்டனிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீசார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கூட்டுச் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கடையால் சாலை விபத்துக்கள் நிகழ்ந்து, அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுவதாக புகாா் தெரிவித்து இளைஞா் ஒருவா் கடை முன் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டாா். தனிநபர் போராட்டத்தில் டாஸ்மாக் கடைதற்காலிகமாக மூடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா பாராசூர் கிராமத்தில் செய்யாறு ஆரணி -பிரதான சாலையில் பாராசூர் கூட்ரோடு சந்திப்பில் டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இந்த மதுக் கடை செயல்பட்டு வருவதால், அப்பகுதியில் மதுப்பிரியா்களால் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்வதாகவும், அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்து அப்பகுதியைச் சோந்த இளைஞா் மணிகண்டன், மதுக் கடை முன் தரையில் அமா்ந்து கடை மூடும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த கடையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து மது வாங்கி குடித்துவிட்டு செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பெற்றோரின்றி பல பிள்ளைகள் தவித்து வருகின்றனர்.
மேலும், நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் இரு சக்கர வாகனம் மோதி முதியவா் எல்லப்பன், சிறுமி ரூபினி ஆகியோா் உயிரிழந்ததற்கு இங்கு செயல்பட்டு வரும் மதுக் கடை தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டினாா்.
எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும். கடையை மூடும் வரை அங்கேயே உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று கூறினார்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் சென்று தா்னாவில் ஈடுபட்ட மணிகண்டனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி முறையாக கோரிக்கை மனு அளித்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி, அப்பகுதியில் இருந்து அழைத்துச்சென்றனர்.
மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க போலீசார் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து ஊழியர்கள் கடையை மூடி பூட்டிக்கொண்டு சென்றுவிட்டனர்.
மேலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, மனோகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தங்கள் பகுதி மக்களின் நலனுக்காக டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி துணைக்கு யாரும் வராதபோதிலும் தனிமனிதனாக போராட்டத்தில் ஈடுபட்டு தற்காலிகமாக டாஸ்மாக் கடையை மூட செய்த மணிகண்டனை பொதுமக்கள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu