நீரில் மூழ்கிய தரைப்பாலம்.. கயிறு மூலம் கரையை கடக்கும் மக்கள்
அக்கரைக்கு செல்ல கயிற்றைப் பிடித்துக் கொண்டு கயிறு மூலமாக தரைபாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் மாண்டஸ் புயலில் தமிழகத்தில் அதிகபடியாக வெம்பாக்கம் தாலுகாவில் 25 செ.மீ. மழை பெய்தது.
இதனால் செய்யாறு அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தின் பெரிய ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரியில் இருந்து வழிந்தோடும் உபரி நீரானது கால்வாய் வழியே மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு சென்றடையும்.
இந்த நிலையில் உபரிநீர் செல்லும் கால்வாய் தூர்ந்து போனதால் உபரிநீர் கால்வாயின் கரைபுரண்டு விவசாய நிலங்களை மூழ்கடித்து செல்கின்றன.
மேலும் அந்த பகுதியின் வழியாக பாண்டியன்பாக்கம் - வெம்பாக்கம் சாலை செல்கிறது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் செல்லும் இந்த சாலையின் வழியில் தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது.
கடந்த 2 நாட்களாக உபரிநீரின் வெள்ளப்பெருக்கு அதிகமாகி கால்வாயின் குறுக்கே சாலையில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தையும் தாண்டி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வெள்ளம் செல்கிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த வழியாக இயக்கப்பட்டு வந்த பஸ் 2 நாட்களாக இயக்கப்படாததால் 10-க்கும் மேற்பட்டகிராம மக்கள் பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
அந்த கரையில் உள்ள பொதுமக்கள் அக்கரைக்கு செல்ல கிராம பொதுமக்கள் கயிற்றைப் பிடித்துக் கொண்டு உயிரை பணயம் வைத்து கயிறு மூலமாக தரைபாலத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 10 க்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் அத்தியாவசியமான பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் வந்தவாசி, உத்திரமேரூர் போன்ற பெரிய நகரத்திற்கு சென்று தான் வாங்க முடியும் ஆனால் தற்போது செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளும், பெரியவர்களும், பள்ளி மாணவர்களும் கயிற்றின் மூலமாக இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
கால்வாய் தூர் வாரபடாததாலும், சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தின் மீது மழை வெள்ளம் வழிந்தோடுவதாலும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் விவசாயமும், போக்குவரத்தும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனால் உடனடியாக தமிழக அரசு அல்லது மாவட்ட நிர்வாகம் இந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதியதாக மேம்பாலம் அமைக்கா வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu