அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு உதிர்ந்து மாணவர்கள் படுகாயம்
பெயர்ந்து விழுந்த பள்ளி கட்டிடம் மேல் கூரை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 47 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கனிமவள நிதி 2020-2021 நிதியாண்டில் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கட்டிடத்தில் வகுப்பறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு உதிர்ந்து கீழே விழுந்தது. கீழே அமர்ந்திருந்த மாணவர்கள் மீது சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்ததால் ரத்த காயங்களுடன் சிறுவர்கள் அலறிடித்து ஓடினர். இதில், 8 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
உடனே தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் ஊர் மக்களை அழைத்து 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மாணவர்களை விரைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, செய்யாறு அரசு மருத்துவமனையில் மாணவர்கள் கேசவன்(5), தினேஷ்(7), யோஷினி(7), ஸ்ரீதன்யா (9), மேகாஸ்ரீ (7), லோஷினி(8), ஹரிணிஸ்ரீ (5), மோனிஸ்ரீ(8) ஆகிய 8 பேருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு எம்எல்ஏ ஜோதி, அனக்காவூர் ஒன்றிய தலைவர் திலகவதி ராஜ்குமார், வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, குப்புசாமி, ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம் ஆகியோர் நேரில் வந்து மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி உரிய மருத்துவ சிகிச்சைக்கு உதவினர். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu