கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை மிரட்டிய மாணவர் கைது

கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை மிரட்டிய மாணவர் கைது
X

கைது செய்யப்பட்ட மாணவர் தமிழரசன்.

தனியார் கல்லூரி வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை காதலிக்குமாறு மிரட்டிய மாணவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்துக்கு உட்பட்ட அப்துல்லாபுரம் கிராமத் தைச் சேர்ந்த 20 வயது மாணவி செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் உடன் படித்த தமிழரசன் (20) என்பவருடன் நண்பராக ஆரம்பத்தில் பழகியுள்ளார். மாணவி தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் தமிழரசன் செய்யாறு அரசினர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் மாணவியின் தாய்க்கு தெரியவந்தது. அப்போது, தமிழரசன் அண்ணன் உறவுமுறை வருவதாக மாணவியின் தாய் கூறியுள்ளார். இதையடுத்து, தமிழரசனுடன் பழகுவதை கடந்த இரண்டு மாதங்களாக மாணவி நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தமிழரசன் மாணவியை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாணவி படிக்கும் தனியார் கல்லூரிக்கு சென்ற தமிழரசன் அவரது வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மாணவியை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்தவர் தன்னைத்தான் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டியுள்ளார். அங்கு வந்த கல்லூரி காவலர் தமிழரசனை பிடித்து செய்யாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் தமிழரசனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!