அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவு

அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவு
X

நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி.

செய்யாறு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அப்போது தீவிர சிகிச்சை பிரிவு, அவசர பிரிவு, ஆண்கள் பெண்கள் பிரிவு, முட நீக்கியல் பிரிவு, உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; தமிழக சுகாதார துறையை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது . இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவு பெற்று ஒரு மாதத்திற்குள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பருவ கால நோய்களான டெங்கு மலேரியா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த மாநிலம் மாவட்டம் வட்டம் அளவில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவாத வண்ணம் தங்களை பாதுகாக்க வேண்டும். அசுத்தமான நீர் தேங்காத வகையில் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் செய்யார் அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் மருத்துவர், ரேடியோலாஜிஸ்ட், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது செய்யாறு கூடுதல் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட இணை இயக்குனர் பாபுஜி, செய்யார் அரசு தலைமை மருத்துவர் பாண்டியன், மருத்துவர்கள் ,செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

போளூர் அரசு ஆஸ்பத்திரியில்சுகாதாரத்துறைசெயலாளர் ஆய்வு

போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி நேற்று மாலையில் போளூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகம் தூய்மையாக உள்ளதை பாராட்டினார். அப்போது மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil